இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டில்ஹாரா லொக்குஹெட்டிகே சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் எதிர்ப்பு ஒழுங்கு விதிகளுக்கு அமைய 3 குற்றச்சாடுகளின் கீழ் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சுயாதீன ஊழல் எதிர்ப்பு தீர்ப்பாயம் மேற்கொண்ட விசாரணையில் இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே அவர் மீதான குற்றச்சாட்டுகள் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதோடு அவருக்கான தடையும் விதிக்கப்பட்டது.
பின்னர் மீள் விசாரணைக்காக அவருக்கு இருக்கின்ற உரிமையின் அடிப்படையில் தீர்ப்பாயம் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.
இதன்படி அவருக்கான தடை தொடரும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டநிர்ணய சதியுடன் அறிந்தோ அறியாமலோ சம்மந்தப்பட்டமை மற்றும் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபடுவோர் தம்மை தொடர்பு கொண்டமையை வெளிப்படுத்தாமை ஆகிய விடயப்பரப்பின் கீழ், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் எதிர்ப்பு விதிகளின் 2.1.1, 2.1.4 மற்றும் 2.4.4 ஆகிய சரத்துக்களின் அடிப்படையில் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நன்றி – hiru news