முல்லைத்தீவு குருந்தூர் மலையில் இரகசியமான முறையில் விகாரையொன்றை அமைப்பதற்குரிய பூர்வாங்க பணிகள் நடைபெறுவதாக கசிந்த தகவல்களை அடுத்து அதுபற்றிய நிலைமைகளை ஆராய்வதற்காக தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் விநோநோதராதலிங்கம் ஆகியோர் உட்பட தமிழர் மரபுரிமை பேரவையின் உறுப்பினர்கள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.தவராசா, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் க.விஜயகுமார் உள்ளிட்டோர் முல்லைத்தீவில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து ஊடகவியலாளர்கள் சகிதம் குருந்தூர் மலைக்கு சென்றபோது அங்கு பெருமளவில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இராணுவத்தினதும் நடமாட்டமும், புலனாய்வாளர்களின் பிரசன்னமும் அதிகளவில் இருந்தது.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் குருந்தூர் மலைக்குச் செல்ல முடியாது என்று கூறினார்கள். இதனையடுத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஆரம்பித்தது.
ஒருகட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நீதிமன்றத்தின் கட்டளையை காண்பித்து இதற்கும் அனுமதி வழங்க முடியாதா என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் கஜேந்திரகுமாரின் சரமாரியான கேள்விகளால் பொலிஸார் தடுமாறிய நிலையில் ஊடகவியலாளர்களை தவிர்த்து விட்டு அங்கு செல்வதற்கு அனுமதி அளித்தனர்.
இதனையடுத்து குறித்த பகுதிக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டனர். அங்கு அகழ்வாராச்சி மற்றும் கட்டுமானத்திற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதை அவதானித்தனர்.
அகழ்வாராய்ச்சிக்காக அந்த பிரதேசத்தை அளவீடு செய்த நிலஅளவை திணைக்கள அளவையாளர், அது பௌத்த வழிபாட்டிடம் அமைந்திருந்ததாக அடையாளம் காணப்பட்ட பிரதேசம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதன்பின்னர் அங்கிருந்து திரும்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் மீண்டும் முல்லைத்தீவு நகருக்குள் ஒன்று கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகளைமுன்னெடுப்பது பற்றி ஆலோசித்தனர். இதில் பாராளுன்றில் கேள்வி எழுப்புவது மற்றும் சட்ட நடவடிக்கைக்குச் செல்வது ஆகிய இரண்டு விடயங்களுக்குரிய தயார்ப்படுத்தல்கi மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.