கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலங்களை அடக்கம் செய்வதை நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக வெட்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசபுத்திரன் ராசமாணிக்கம் தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற உரையின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். முஸ்லிம்களை பொறுத்தவரையில் அவர்கள் குர்ஆன் வழியில் செயற்படுகின்றனர்.
இந்த நிலையில் அவர்களை இலங்கை அரசாங்கம் அரசியல் ரீதியில் பார்ப்பதாக அவர் குற்றம் சுமத்தியிருக்கிறார். எனவே இந்த விடயத்தில் அனைவருமே வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதேவேளை இவ்வாறான அரசாங்கம் ஒன்று கொண்டுவந்த 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தது தொடர்பாக தாம் வெட்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பை சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரமே 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை.
ஏனைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.
எனவே அது ஒரு வெட்கப்பட வேண்டிய விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் நீதிமன்றம் செல்வதற்கு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தள்ளப்பட்டார்கள்.
அரசாங்கம் நியமித்துள்ள நிபுணர் குழு அதற்கு அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நிபுணர்கள் குழு தெரிவித்த நீரின் ஊடாக வைரஸ்கள் பரிமாற்றம் செய்யப்படும் அல்லது பரவும் என்ற விடயத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது. இதனையும் நாடாளுமன்ற உறுப்பினர் தமது உரையின்போது சுட்டிக்காட்டியுள்ளார்.