கொரோனா வைரஸ் தொற்றினால் இறப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்தல் மற்றும் தகனம் செய்தல் ஆகிய இரண்டுக்கும் அனுமதி வழங்குமாறு வலியுறுத்தி பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.
அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி குறித்து நீங்கள் கவனம் செலுத்தவேண்டும். கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவர்களின் உடல்களைக் கட்டாயமாகத் தகனம் செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொள்கை எமக்குப் பெரிதும் விசனமளிக்கிறது.
இஸ்லாமிய மத நம்பிக்கைகளின் பிரகாரம், ஒருவர் உயிரிழந்த பின்னர் அவருக்கு வழங்கப்படும் இறுதி மரியாதையே அடக்கம் செய்வதாகும். எனினும் முஸ்லிம்களின் மத நம்பிக்கைக்கு முரணான வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டாயத்தகனம் என்ற கொள்கைக்கு இதுவரையில் அரசாங்கம் நியாயமான காரணங்கள் எதனையும் முன்வைக்கவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.