இங்கிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஏஞ்சலோ மெத்யூஸின் சதத்தின் உதவியுடன் இலங்கை சிறந்த நிலையை நோக்கி நகர்ந்துள்ளது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இன்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதலாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இன்றைய ஆட்டத்தில் ஏஞ்சலோ மெத்யூஸ், 2015க்குப் பின்னர் சொந்த மண்ணில் முதலாவது சதத்தை அடித்துள்ளார்.
காலி சர்வதேச விளையாட்டரங்கில் மெத்யூஸ் பெற்ற முதலாவது சதமாகவும் இது அமைந்ததுடன் 107 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். 228 பந்துகளை எதிர்கொண்ட மெத்யூஸ் 11 பவுண்ட்றிகளை அடித்திருந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் அவர் குவித்த 11ஆவது சதமாகும். சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் இதே தினத்தில் ஸிம்பாப்வேக்கு எதிராக ஹராரேயிலும் ஏஞ்சலோ மெத்யூஸ் சதம் குவித்திருந்ததுடன் அதனை இரட்டைச் சதமாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.