சித்தாககொங், சத்தோக்ராம் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நான்கு வீரர்கள் குவித்த அரைச் சதங்களின் பலனாக 120 ஓட்டங்களால் பங்களாதேஷ் மிக இலகுவாக வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற ஆட்டக்கணக்கில் முழுமையாக பங்களாதேஷ் சுவீகரித்தது. மேலும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக பங்களாதேஷ் ஈட்டிய எட்டாவது தொடர்ச்சியான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வெற்றியாகவும் இது அமைந்தது.
அத்துடன் ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண சுப்பர் லீக் தொடரில் மிகவும் அவசியமான 30 புள்ளிகளையும் பங்களாதேஷ் பெற்றுக்கொண்டது.
தமிம் இக்பால், முஷ்பிக்குர் ரஹிம், மஹ்முதுல்லாஹ் ரியாத், ஷக்கிப் அல் ஹசன் ஆகியோர் குவித்த அரைச் சதங்களுடன் 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 297 ஓட்டங்களைக் குவித்த பங்களாதேஷ், பலம்குன்றிய மேற்கிந்தியத் தீவுகளை 177 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது.
தமிம் இக்பால், முஷ்பிக்குர் ரஹிம், மஹ்முதுல்லாஹ் ரியாத் ஆகிய மூவரும் தலா 64 ஓட்டங்களைப் பெற்றதுடன் மஹ்முதுல்லாஹ் ரியாத் ஆட்டமிழக்காமலிருந்தார். இவர்களை விட ஷக்கிப் அல் ஹசன் 51 ஓட்டங்களைப் பெற்றார்.
மேற்கிந்தியத் தீவுகள் பந்துவிச்சில் அல்ஸாரி ஜோசப், ரெமன் ரய்பர் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 44.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்தது. ரோவ்மன் பவல் மாத்திரமே ஓரளவு திறமையை வெளிப்படுத்தி 47 ஓட்டங்களைப் பெற்றார்.
பங்களாதேஷ் பந்துவீச்சில் மொஹம்மத் சய்புதின் 3 விக்கெட்களையும் முஸ்தாபிஸுர் ரஹ்மான், மெஹிதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.