யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள ஆய்வுகூடத்துக்கு பி.சி.ஆர். இயந்திரத்தைக் கையளிப்பதற்காக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப்லிற்ஸ் (Ambassador Teplitz) யாழிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
அமெரிக்காவின் யூ.எஸ்.எயிட் திட்டத்தின் மூலம் அன்பளிப்புச் செய்யப்பட்ட குறித்த இயந்திரம், எதிர்வரும் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலையில் சம்பிரதாய பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.ஸ்ரீறிசற்குணராஜா தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி.ரெப்லிற்ஸ் அம்மையார் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பி.சி.ஆர். இயந்திரத்தைக் கையளிக்கவுள்ளார்.
அத்துடன், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதிஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.ஶ்ரீபவானந்தராஜா ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.