கொழும்பில் வேலைக்காக வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுவனொருவன் கடந்த இரண்டுவாரங்களாக நிர்க்கதியாக வீதியில் நிற்பதாக சற்றுமுன்னர் கொள்ளுப்பிட்டியில் உணவகம் ஒன்றை வைத்துள்ள சகோதர இனத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் ஆங்கிலத்தில் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
சிவா என்ற பெயருடைய அச்சிறுவன் வீதிகளிலேயே படுத்துறங்குவதாகவும் அவன்வசமிருந்த அடையாள அட்டை முதற்கொண்டு அனைத்தையுமே அபகரித்துவிட்டார்கள் எனவும் அந்தப்பதிவில் போடப்பட்டிருந்தது.
டுவிட்டரில் பதிவிட்டிருந்த மெலிஸாவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது தனது தாயார் வீதியில் நின்றுகொண்டிருந்த இந்த சிறுவனை தமது உணவகத்திற்கு அருகே அழைத்துவந்தபோது பலநாட்களாக குளிக்காத நிலையில் மிகவும் பரிதாபகரமான நிலையில் காயங்களுடன் அச்சிறுவன் காணப்பட்டதாககுறிப்பிட்டார்.
உடனே தாம் உணவைக் கொடுத்து கையில் காசும் கொடுத்து குளித்துவிட்டு வருமாறு கூறியதாக நல் இதயம் கொண்ட அப்பெண்மணி கூறினார். அச்சிறுவன் மீண்டும் வந்ததும் மேலதீக விபரங்களைப் பெற்றுத்தருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.