ஜப்பானிய அரசாங்கத்தின் நிதி உதவியில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்துக்கு புதிதாக நிறுவப்பட்ட ஆய்வு மற்றும் பயிற்சி தொகுதியை இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியமா அகிரா 2021 பெப்ரவரி 5ஆம் திகதி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் பேராசிரியர். ஜி.எல்.பீரிஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன், உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வு மற்றும் பயிற்சி தொகுதியை நிறுவுவதற்காக, 2.8 பில்லியன் ரூபாயை நன்கொடை உதவியாக ஜப்பானிய அரசாங்கம் வழங்கியிருந்தது. வட மாகாணத்தின் உலர் வலயத்தில் விவசாயம் மற்றும் கால்நடைத் துறையின் உற்பத்தித் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு அவசியமான ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு உகந்த சூழலை வழங்குவதாக இந்த நிலையம் அமைந்திருக்கும்.
இலங்கைக்காக உதவிகளை வழங்குவதில் ஜப்பான் காண்பிக்கும் முன்னுரிமை அடிப்படையிலான செயற்பாடுகளில் வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வதும் அடங்கியுள்ளதாக தூதுவர் சுகியாமா குறிப்பிட்டார். புதிய ஆய்வு மற்றும் பயிற்சித் தொகுதியினூடாக, மாணவர்களுக்கு தமது நிபுணத்துவத்தை விவசாயம் மற்றும் கால்நடைத்துறையை மேம்படுத்துவதில் ஈடுபடுத்த உதவியாக அமைந்திருப்பது மாத்திரமன்றி, இலங்கையில் விவசாயம் மற்றும் கால்நடைத் துறைக்கான புதிய களத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான சிறந்த ஆய்வு நிலையமாகவும் அமைந்திருக்கும் எனக் குறிப்பிட்டார்.