இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான விசாரணைக்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது சம்பந்தமான வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதி செயலகத்தினால் நேற்று முன்தினம் (12.02.2021) வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு நீதியரசர் ஏ. எச். எம். டி. நவாஸ் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் 3 ஆணையாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் செயற்திறனை விரிவாக்கும் நோக்கிலும், பால்நிலை சமத்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலும் யோகேஸ்வரி பற்குணராசாவும் ஆணையாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணைக்குழுவில் ஓய்வு பெற்ற காவற்துறை மா அதிபர் சந்திரா ஃபெர்ணாண்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் ஏனைய ஆணையாளர்களாவர்.