வன்னி மாவட்டத்திற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்தில் எமக்கு பல சந்தேகங்கள் உண்டு எனத்தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. வினோ நோகராதலிங்கம், வவுனியா பொருளாத மத்திய நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைக்கும் நிகழ்வு அவரின் விஜயத்திற்கான நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருந்தபோதும் அது இறுதி நேரத்தில் மாற்றப்பட்டு திறந்து வைக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியதுடன் சில பிரச்சினைகளினால் ஒரு கட்டிடத்தையே திறந்து வைக்க முடியாத ஜனாதிபதியினால் இந்த நாட்டின் இனப்பிரச்சினையை எப்படி தீர்த்து வைக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நான் விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு அவா் தெரிவித்தாா்.
அவர் மேலும் கூறுகையில், சனிக்கிழமை ஒரு நல்ல நோக்கத்திற்காக ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்க வுனியா வந்திருந்தார். அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். அவர் முதல் முதல் தனது விஜயத்தை வன்னி மாவட்டத்திற்கு மேற்கொண்டதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
ஜனாதிபதி அங்கு அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் கூட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தபோது யுத்த காலத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா செயலக வாசலில் குழுமியிருந்தனர். இந்த நாட்டின் தலைவரை நாம் சந்திக்க வேண்டும்,அவரிடம் எமது பிரச்சினைகளை கூற வேண்டும் என்பதற்காகவே அங்கு குழுமியிருந்தனர். ஆனால் இங்கிருந்த பொலிஸார் நீங்கள் ஊடகங்களுக்காக, சர்வதேசத்திற்காகவே போராட்டம் நடத்துகின்றீர்கள் என் கூறி ஜனாதிபதியை சந்திக்க விடாது தடுத்தனர். அந்த உறவுகளின் தூய்மையான போராட்டத்தை கேவலப்படுத்தினர் இதன்மூலம் அந்த தாய்மார்களுக்கு இந்த அரசோ ஜனாதிபதியோ ஒரு போதும் தீர்வை வழங்கப்பபோவதில்லையென்பதனை உறுதிப்படுத்தினர்.
வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 5 வருடங்களாகியும் இதுவரையில் அது திறக்கப்படவில்லை. ஜனாதிபதியின் விஜயத்தின்போது அதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் நிகழ்ச்சி நிரலில் இருந்தன. ஆனால் அது தவிர்க்கப்பட்டு மத்திய நிலையம் திறக்கப்படவில்லை. ஏன் திறக்கப்படவில்லை? வேறு சிக்கல்கள், பிரச்சினைகள் இருக்கலாம். அவை என்ன? திறக்கப்படாததற்கான காரணம் என்ன? ஒரு கட்டிடத்தை தீர்ப்பதற்கான பிரச்சினையைக்கூட ஜனாதிபதியினால் தீர்க்க முடியவில்லை. அப்படிப்பட்டவரால் இந்த நாட்டின் இனப்பிரச்சினை அபைவிருத்தி சார்ந்த பிரச்சினையென ஒட்டு மொத்த பிரச்சினையை எப்படித் தீர்க்க முடியும்? எனவும் அவா் கேள்வி எழுப்பினாா்.