மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் பட்சத்தில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை.சோ.சேனாதிராஜாவையும் கிழக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக இராசமாணிக்கம் சாணக்கியனையும் நியமிக்கலாம் என்று முன்மொழியப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று வவுனியா குருமன்காட்டில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
இதன்போது யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கருத்து வெளியிட்ட தருணத்தில் இனவிடுதலைப் போராட்டத்தில் நீண்ட அனுபவம் மிக்க தமிழரசுக்கட்சியின் மாவை.சோ.சேனாதிராஜாவை வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராகவும், இளைஞர்கள் மத்தியில் அதிக செல்வாகுப் பெற்றுள்ள இராசமாணிக்கம் சாணக்கியனை கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகவும் களமிறக்க வேண்டும் என்று முன்மொழிவொன்றைச் செய்திருக்கின்றார்.
அத்துடன் மாவை.சேனாதிராஜாவுடன் களமிறங்கும் ஏனைய வேட்பாளர்கள் இளைஞர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.
அதேபோன்று கிழக்கில் கருணா, பிள்ளையான் போன்றவர்களின் சவால்களை முறியடிப்பதற்கு இளைஞரான சாணக்கியன் பொருத்தமானவர் என்றும் அவருக்கு வடக்கு கிழக்கு இணைந்த வாலிபர் முன்னணியில் முக்கிய பதவியொன்றை வழங்க வேண்டும் என்றும் சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடத்தில் பாராளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கும் பெண் பிரதிநிதித்துவத்தினை உறுதிசெய்வதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவுக்கும் உறுப்புரிமை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த தகவல்கள் மத்தியகுழு கூட்டத்தில் பங்கேற்ற முக்கியஸ்தர் ஒருவரால் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது