இலங்கையின் வட பிராந்தியத்தில் கண்ணி வெடி அகற்றும் மனிதநேய செயற்பாடுகளுக்கு 620,379 அமெரிக்க டொலர்களை (அண்ணளவாக ரூ. 115 மில்லியன்) ஜப்பானிய அரசாங்கம் வழங்கியிருந்தது. Skavita Humanitarian Assistance and Relief Project (SHARP) எனும் திட்டத்துக்கு இந்தத் தொகையை ஜப்பான் அரசு வழங்கியிருந்தது.
இந்த நன்கொடைக்கான ஒப்பந்தம் கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவரின் வதிவிடத்தில் 2021 பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இதில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் சுகியாமா அகிரா மற்றும் SHARP நிகழ்ச்சி முகாமையாளர் ஓய்வு பெற்ற லெப்டினன் கேணல் வி.எஸ்.எம். ஜயவர்தன ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
எதிர்வரும் சில ஆண்டுகளில் கண்ணிவெடித் தாக்கமற்ற இலங்கை எனும் நிலையை எய்துவதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசாங்கம் செயலாற்றுகின்றது. அதனூடாக உலகின் அடுத்த கண்ணிவெடி பாதிப்பற்ற நாடாக திகழ்வது அதன் எதிர்பார்ப்பாகும். இலங்கைக்கு 2002 ஆம் ஆண்டு முதல் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் பெருமளவான நன்கொடைகளை வழங்கியுள்ளது.
SHARP இன் பிரதம நன்கொடை வழங்குநராக ஜப்பானிய அரசாங்கம் திகழ்வதுடன், 2016 ஆம் ஆண்டு இந்த அமைப்பு நிறுவப்பட்டு, முதல் திட்டம் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது முதல் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு அவசியமான நிதி உதவிகளை வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, SHARP இனால் 1.5 km2 பகுதி கண்ணிவெடி அகற்றலுக்கு உட்படுத்தப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடியினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களை பாதுகாப்பானதாக விடுவித்து, மீள்குடியேற்ற பணிகளை துரிதமாக முன்னெடுக்கவும், அவர்களின் வாழ்வாதாரங்களை நேரடியாக அல்லது மறைமுகமாக மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிதி உதவியை வழங்கியிருந்தமை தொடர்பில் ஓய்வு பெற்ற லெப்டினன் கேணல் வி.எஸ்.எம். ஜயவர்தன கருத்துத் தெரிவிக்கையில்,
இன்றைய தினம் ஜப்பானிய தூதரகத்தினால் SHARP க்கு தொடர்ச்சியாக 5 ஆவது வருடமாகவும் GGP நிதி வழங்கப்பட்டிருந்தது. இதற்காக நாம் ஜப்பானிய தூதரகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். 2016 ஆம் ஆண்டில் SHARP ணிகளை முன்னெடுக்க ஊக்குவித்திருந்ததுடன், அதனைத் தொடர்ந்து வருடாந்தம் தொடர்ச்சியாக நிதி உதவிகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக SHARP க்கு ஜப்பானின் GGP நிகழ்ச்சித் திட்டத்திடமிருந்து மாத்திரம் நிதி வழங்கப்படுகின்றது.
SHARP இனால் 1,574,573m2 பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதுடன், 9135 கண்ணி வெடிகள், 119 தாங்கி தகர்ப்பு வெடிகள், 3,289 UXO கள் மற்றும் 12000 க்கும் அதிகமான SAAகள் போன்ற 2016 நவம்பர் மாதம் முதல் இதுவரையில் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளன. 1500 குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அனுகூலம் பெற்றுள்ளன.
SHARP தனது செயற்பாடுகளை சிறப்பாகவும், வெளிப்படையாகவும், வினைத்திறன் வாய்ந்த வகையிலும், ஜப்பானிய தூதரகத்தின் அதிகாரிகளுடன் முழு ஆதரவுடன் முன்னெடுக்கும் என்பதுடன், அனுசரணை வழங்குநர்களின் நிதிப் பங்களிப்பின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிவர்த்திக்கும் வகையில் இந்தப் பணிகள் அமைந்திருக்கும்.
SHARP இன் சகல அங்கத்தவர்களின் உளமார்ந்த நன்றியை ஜப்பானிய தூதுவர் சுகியாமா அகிராவுக்கும், ஜப்பானிய தூதரகத்தின் சகல GGP ஊழிய அங்கத்தவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வதுடன், SHARP ஸ்தாபிக்கப்பட்டது முதல் அதன் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கிய சகல ஜப்பானிய மக்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.
அத்துடன், இலங்கையில் கண்ணி வெடி அகற்றும் பணிகளை முன்னெடுப்பதற்கு ஜப்பானிய தூதரகம் ஆரம்பம் முதல் வழங்கி வரும் பங்களிப்புக்கும், நாட்டு மக்களின் நலனில் காண்பிக்கும் அக்கறைக்கும் நன்றி தெரிவிக்கின்றோம் என்றார்.