குருந்தூர் மலைப் பகுதியில் உள்ள தொல்லியல் பெறுமதியான பகுதியில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளமைக்கு கண்டனத்துக்குரியது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் 20/01/2021 அன்று நடைபெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 14 ஆம் திகதி மீண்டும் தொல்லியல் திணைக்களத்தால் குருந்தூர் மலைப் பகுதியை மீள் அளவீடு செய்ய வேண்டும் என கோரப்பட்டது. இதனையடுத்து நில அளவைத் திணைக்களத்தின் அளவீட்டாளர்கள் அங்கு சென்று அளவீட்டுப் பணிகளை மேற்கொண்டனர். எனினும் இதுவரை எந்தவொரு மதத்திற்கு உரியது என கூறப்படாத குருந்தூர் மலையை, புராதன குருந்தூர் விகாரை என நில அளவீட்டு அதிகாரி பெயரிட்டுள்ளார்.
இதனை தொல்லியல் திணைக்களம் செய்யவில்லை. தொல்லியல் திணைக்களம் அகழ்வு ஆராய்ச்சி கூட செய்திருக்கவில்லை. அவர்கள் தமது பணிகளை செய்திருக்கவில்லை. ஆனால் சாதாரண அளவீட்டு அதிகாரி, நிபுணத்துவம் பெற்றவர் போல அந்தப் பகுதியை பௌத்த விகாரைக்குரிய பகுதியாக அடையாளப்படுத்தியுள்ளார்.இங்கு என்ன நடக்கிறது.
இந்த அரசாங்கம் கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்டவடக்கு கிழக்கு மக்களை பலப்படுத்தப் போவதில்லை. திட்டமிட்ட வகையில் அந்த மக்களை இயங்கா நிலையில் வைத்திருப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. உட்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.பௌத்த விகாரைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.
ஏன் ? வடக்கு கிழக்கு மக்களை அதிகாரமற்றவர்கள் ஆக்கி, அவர்களை இயங்காநிலையில் வைத்திருப்பதற்காகவே இவ்வாறு செய்யப்படுகின்றது. ஆகவே அந்த மக்களால் நாட்டில் உள்ள ஏனைய மக்களுடன் ஈடு கொடுக்க முடியாத நிலைக்கு அளவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
காலணித்துவத்திற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு, அந்த பகுதியின் ஜனநாயகம் சிதைக்கப்படுகின்றது. இந்த செயற்பாட்டை நாம் கண்டிக்கின்றோம்.
இங்கு தினேஷ் குணவர்தன இருக்கின்றார். பரம்பரை பரம்பரையாக அவரது குடும்பத்தினர் மதிப்புக்குரிய வகையில் அரசியலில் ஈடுபட்டுவருகின்றனர். சில வழிகளில் ஏனும் அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது பின்னோக்கிய செயற்பாடு என்று கூறியுள்ளார்.