கிளாலி வடபகுதி வரலாற்றில் மிக முக்கியத்துவம் பெறும் இறங்குதுறை. 1995 இடப்பெயர்வைத் தொடர்ந்து யாழ்ப்பாண மக்களின் கடல்வழி போக்குவரத்து கேந்திர நிலையம் ஆகியது கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலகே கிளாலி.
எழுதுமட்டுவாழ் புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள வீதியால் பயணித்து கிளாலி கிராமத்தில் உள் நுழைய முடியும் மாரி காலப்பகுதியில் உள் நுழையும் போது பச்சைப் பசேலென்ற தென்னந்தோப்புகளும் வயல் நிலங்களையும் பனம் கூடல்களையும் கண்டு ரசிக்க முடியும்.
ஏராளமான துரவுகள் கிளாலியின் நீர்வளத்தைப் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது
கிறிஸ்தவ இந்து மக்கள் செறிந்து வாழும் இக்கிராமத்தில் பிரதான தொழில்களாக கடற்றொழில், விவசாயம், கால்நடை வளர்ப்பு காணப்படுகிறது .
ஐந்து தேவாலயங்கள் கிளாலி கிராமத்தில் காணப்படுகின்றது . போர்த்துகேயர் கால இலக்கியமான அர்யாகப்பர் அம்மானை இவ்வூரில் அமைந்துள்ள அர்யாகப்பர் தேவாலயத்தின் மீது பாடப்பட்டுள்ளது.
புராணபடலபாணியை இவ்விலக்கியத்தில் காணலாம். அந்நியர் காலத்தில் மிக முக்கியமான இறங்கு துறையாகவும் மதம் பரப்பும் கேந்திர நிலையமாக விளங்கியது .


அர்யாகப்பர் தேவாலயம் யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியில் வடபகுதியின் மிக முக்கியமான யாத்திரை தலமாக விளங்கியது . இலங்கையின் பல பகுதிகளில் இருந்து திருவிழாக்காலங்களில் ஏராளமானவர்கள் வந்து இவ்வாலயத்தை தரிசித்துச் சென்றதாகவும் கூடு சுற்றுதல், வாணவேடிக்கை திருவிழா பக்திபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தாகவும் இவ்வூர் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
கிளாலி, கச்சாய் போன்ற கடல்கள் ஆழம் குறைந்த கடற்பகுதி . சேற்று கடல் என்று அழைக்கப்படுகிறது.ஈழயுத்தத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலையமாக விளங்கியது . இடம்பெயர்ந்த பெருமளவான மக்கள் இக்கிராமத்தில் தங்களுடைய தற்காலிக வாழ்விடங்களை அமைத்துக்கொண்டனர்.
பங்குனி தொடக்கம் வைகாசி வரையான காலப்பகுதியில் கடலில் ஏராளமான கணவாய்,இறால் கிடைக்கும் என்கிறார்கள் இவ்வூர் மீனவர்கள். கிளாலி இறங்கு துறையில் இருந்து எழுதுமட்டுவாள் அல்லிப்பளை காற்றாலைகளை கண்டு ரசிக்க முடியும்.
இன்றைக்கும் இக்கிராமத்தில் யுத்தத்தின் வடுக்களை கண்டுவிட முடியும் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் மேலெழுந்து வரும் வடபகுதி கிராமங்களில் முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது.காலைச்சூரியோதயம் ரசிக்கக்கூடிய இடம் கிளாலி.




