வட-கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி, சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 02/02/2021 அன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்கும் வகையில், வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினர் இந்த போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளனர்.
இன்று தொடக்கம் வரும் 6 ஆம் நாள் வரை இந்த போராட்டம் அமைதியான முறையில் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
மதகுருக்கள், பொதுமக்கள், சிவில் சமூக அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள், என அனைவரும் கலந்து கொண்டு தமது போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என காணாமல் போனவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து நாளை தொடக்கம் 6 ஆம் நாள் வரை இடம்பெறவுள்ள, பொத்துவிலில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிக்கு ஆதரவு தருமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.