சீனா கொரோனா தடுப்பூசிகளை வளர்முக நாடுகளுக்கு, சரியான நேரத்தில் தொடாச்சியாக வழங்கும் என்றும்; சுகாதார சமூகத்தை கட்டியெழுப்ப பங்களிக்கும் என்று வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.
01/02/2021 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சீனா கொரோனா தடுப்பூசிகளை பாகிஸ்தானுக்கு நன்கொடையாக அளித்தள்ளது. ஏனைய நாடுகளுக்கும் தொடர்ந்தும் அவ்வாறு அனுப்பி வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளை உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் சீனாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகின்றேன். மேலும் பொருளாதார ரீதியாக வளரும் நாடுகளில் தடுப்பூசிகளின் அணுகலை அதிகரித்தல் மற்றும் மலிவு விலையில் அதனை வழங்குவதற்கும் சீனா தொடர்ந்தும் பங்களிக்கும்.
தற்போது, பாகிஸ்தானைத் தவிர, புருனே, நேபாளம், பிலிப்பைன்ஸ், மியான்மர், கம்போடியா, லாவோஸ், இலங்கை, மங்கோலியா, பாலஸ்தீனம், பெலாரஸ், சியரா லியோன், ஜிம்பாப்வே மற்றும் எக்குவடோரியல் கினியா உள்ளிட்ட 13 வளர்முக நாடுகளுக்கும் சீனா கொரோனா தடுப்பூசியை வழங்குகின்றது.
வெளிநாட்டு பங்காளிகளுடன் கூட்டு ஆராய்ச்சி மற்றும் தடுப்பூசிகளை தயாரிப்பதில் சீனா தனது நிறுவனங்களுக்கு ஆதரவளித்துள்ளதுடன், ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம், மொராக்கோ, இந்தோனேசியா, துருக்கி, பிரேசில் மற்றும் சிலி உள்ளிட்ட நாடுகளுக்கு சினோபார்ம் மற்றும் சினோவாக் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது.
தவிர, அவசர தேவைப்பாடுகளைக் கொண்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் சீனாவும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சீன தடுப்பூசிகள் மற்றும் சீன மருந்துகளை அவசர தேவைக்காக பயன்படுத்துவதற்கு நாடுகள் அங்கீகரத்துள்ளன.
கொரோனா தடுப்பூசிகளின் சமமான விநியோகம் மற்றும் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் சர்வதேச சமூகம் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வளரும் நாடுகளில் தடுப்பூசிகளின் இலகுவாக கிடைக்கும் தன்மை மற்றும் மலிவு விலை ஆகியவற்றை உறுதி செய்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.