யாழ்ப்பாணம், குருநகரில் வாள்வெட்டு தாக்குதலில் உயிரிழந்த இளைஞனிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. எனினும், வைத்தியசாலை நிர்வாகத்தின் அறிவிப்பிற்கு இளைஞனின் உறவினர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிப்பதால், வைத்தியசாலையில் கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் பொலிஸாரும், இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
குருநகர், சுகவாழ்வு சிகிச்சை நிலையத்திற்கு அண்மையில் கடந்த 22ஆம் திகதி வாள்வெட்டு தாக்குதலிற்கு இலக்கான 5 இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்த எட்மண்ட் ஜெரன் (24) என்ற இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
அவரது சடலத்தின் மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும், கடந்த 22ஆம் திகதி அந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையில், இளைஞனிற்கு எதிர்மறையான முடிவு கிடைத்ததாக தெரிவித்து, உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் கொந்தளித்துள்ளனர்.
இதனால் வைத்தியசாலையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் பொலிஸாரும், இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இளைஞனின் சடலத்தின் மாதிரிகளில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுமென தெரிகிறது.