ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள மூன்று அரசியல் கூட்டுக்களும், சிவில் தரப்பினரும், மதத்தலைவர்களும் அனுப்பி வைத்துள்ள ஆவணத்தில் அரசியல் பிரதிநிதிகளாக மூன்று கட்சிகளின் தலைவர்களான சம்பந்தன், கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன் ஆகிய மூவருமே கையொப்பமிட்டுள்ளனர்.
இந்நிலையில், விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சியான ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தான் குறித்த ஆவணத்தில் கையொப்பம் வைப்பதற்கு இடமளிக்கப்படாமை தொடர்பில் கேள்விகளைத் தொடுத்துள்ளார்.
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஏற்கனவே கையொப்பமிட்டு ஐ.நாவுக்கு அனுப்பி கோரிக்கை கடிதத்தில் தன்னைவிட பலமடங்கு சேவைகளை பொறுப்பெடுத்து தங்கள் கடமைகளை ஆற்றிய சிவாஜிலிங்கம் மாவைசேனாதிராஜா செல்வம் அடைக்கலநாதன் சுரேஸ்பிரேமச்சந்திரன் போன்றவர்களும் முன்னாள் இன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள். இக்காலகட்டத்தில் அவர்களையும் இணைத்து கையொப்பமிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றார்.
அனந்தி, விக்னேஸ்வரன் மற்றும் மாவை.சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருக்கு அனுப்பி கடிதத்தில் ‘அரசியல் அறம்’ கோரியும், கையொப்பமிடுவதற்கு தனக்கான தகமை குறித்தும் சுட்டியுள்ள பத்துவிடயங்கள் வருமாறு,
- நான்2009 மே 18 முள்ளிவாய்க்கால் இனவழிப்பு யுத்தத்தின் நேரடி சாட்சி என்பதுடன் இறுதிபோரின் முடிவில் நிராயுதபாணியாக போர்க்கைதியாக தமிழீழ விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளரான என் கணவர் எழிலனை இலங்கை இராணுவத்திடம் கையளித்து இன்றுவரை அவரின் விடுதலைக்காக போராடிவருபவள்.
- 2010இல் போர்க்குற்ற விசாரணை தொடர்பாக தருஸ்மனின் விசாரணை குழுவிற்கு அரசுத்தியோகத்தராக இருந்தும் இனவழிப்பு அறிக்கையை அனுப்புயவள். அதன் பயன்தான் சூகா யஸ்மின் அம்மையாருடனான எனது இன்றை தொடர்பாடல்.
- 2011இல் இலங்கை அரசால் நிறுவப்பட்டLLRCவிசாரணைக்கு இராணுவ அச்சுறுத்தல் மத்தியில் கிளிநொச்சியில் நேரடி சாட்சியம் வழங்கியிருந்தேன்.
- 2011ல் நவிப்பிள்ளை அம்மையாரின் தொழினுட்ப உத்தியோகத்தர் குழு இலங்கை வந்த போது கொழும்பு ஐ.நா. அலுவலகத்தில் நேரடியாக சென்று சாட்சியம் வழங்கியவள்.
- 2011இல் வ்வுனியா உயர்நீதிமன்றில்5குடும்பத்தினரை திரட்டி ஆட்கொணர்வுமனு வழக்கு தாக்கல் செய்தவள்.
- 2013இல் ஜேர்மன் பிறிமனில் நடைபெற்ற தீர்ப்பாயத்தில்கலந்து கொண்டு ஈழத்தமிழருக்கு நடைபெற்றது இனவழிப்பு என சாட்சியம் கூறியவள்.
- 2014இல் இனவழிப்பு சாட்சியங்கள் வடக்கு கிழக்கு உட்பட84சாட்சியங்களை ஐநாசபைக்கு வழங்கியவள்.
- 2014இல் ஐ.நா.சபைக்கு நேரடி சாட்சியம் வழங்கியவள்.
- 2015இல் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு நேரடி சாட்சியம் வழங்கியவள்.
- 2014மார்ச் தொடக்கம்2020 மார்ச் வரை சுமார் 12 தரத்திற்கு மேல் அதிக தடவை எனது சொந்த செலவில் சென்று ஐநா அரங்கில் பொது அரங்கில் இனவழிப்பு தொடர்பாக பேசியுள்ளேன்.
“எதுஎப்படியோ எத்தடை வந்தாலும் எனது நீதி கோரும் பயணம் தொடரும்” இதுதான் அனந்தியின் வாதம்..