வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை மரியாதை நிமித்தமாக சந்தித்த அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி, அவுஸ்திரேலியாவுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடினார்.
பல முனைகளில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் நல்கிய உதவியைப் பாராட்டிய வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் குறிப்பாக, கடல் மார்க்கமான ஒழுங்கற்ற இடம்பெயர்வு, கொவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுதல், கல்வி, தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி, பொருளாதார மற்றும் முதலீட்டுத் துறைகளில் அவுஸ்திரேலியாவால் ஈடுசெய்யப்பட்ட ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தை வலியுறுத்தினார்.
இந்து சமுத்திரத்தின் அண்டை நாடுகளாக இருப்பதால், எதிர்கால கடல் பேரழிவுகளைத் தடுத்தல் மற்றும் சர்வதேச மற்றும் பிராந்திய மன்றங்களிலான ஒத்துழைப்பு ஆகியவற்றில் கடல்சார் துறையில் நெருக்கமான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் கண்டறிந்தனர். இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இடையே இராஜதந்திர உறவுகளை நிறுவியதன் 75வது ஆண்டு நிறைவை 2022ஆம் ஆண்டு கொண்டாடுவதற்கு வெளிநாட்டு அமைச்சரும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் ஒப்புக் கொண்டனர். வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.