யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியே அமைக்கப்படும் என்றும் அதற்கான நிதி உதவிகளை அளிக்குமாறும் கோரியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அங்கு பிறிதொரு பெயரில் தூபி நிர்மாணிக்க இடமளிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் 19/01/2021 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே மாணவர் ஒன்றியத்தின் தலைவர் இ.அனுசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டது. இதற்கு எதிராக உள்நாட்டிலும் உலக அரங்கில் இருந்தும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் வெளிப்படுத்தப்பட்டது.
இடிக்கப்பட்ட தூபியை மீள அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்களும் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் இணைந்து தொடர் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மீளவும் அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்து தூபி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது ஆயினும் இத் தூபியை மீள் அமைக்கப்படுவது தொடர்பில் சில சர்ச்சைகளும் வெளிப்படுத்தப்பட்ட வந்தன.
குறிப்பாக இத் தூபியானது முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அல்லாமல் பொதுவானது என்றும் சமாதானத் தூபி என்றும் பல கருத்துக்கள் பல செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அத்தகைய கருத்துக்கள் செய்திகளை மறுத்துள்ள மாணவர் ஒன்றியம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியே அமையும் என்றும் அதனை தவிர வேறு எதுவும் அமைக்கப்படாது எனவும் தெரிவித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.