வேலணை பிரதேச செயலர் சோதிநாதனின் இடமாற்றத்தைக் கண்டித்தும், புதிய செயலாளர் கடமைகளைப் பொறுப்பேற்கு எதிர்ப்பும் தெரிவித்தும், பிரதேச செயலக வாயிலை மூடி பொதுமக்கள் 01/02/2021 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடற்படைக்கு காணி சுவீகரிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டதை அடுத்து, வேலணை பிரதேச செயலாளர் சோதிநாதன், உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்குப் பதிலாக, வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலாளர் சிவகரன், வேலணை பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டு, இன்று காலை கடமைகளைப் பொறுப்பேற்கவிருந்தார்.
இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வேலணைப் பிரதேச மக்கள் பிரதேச செயலக வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சிறிலங்கா காவல்துறையினர் இன்று முற்பகல் 10 மணியளவில் பேருந்து ஒன்றில் வந்திறங்கி, போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைந்து செல்லாவிட்டால், கைது செய்வோம் என்று எச்சரித்துள்ளனர்.
அதனால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது.எனினும், காவல்துறையினரின் பாதுகாப்புடன், புதிய பிரதேச செயலாளர், கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.