இந்தியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம், எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜோ ரூட் குவித்த இரட்டைச் சதத்தின் உதவியுடன் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அதன் முதலாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்களை இழந்து 555 ஓட்டங்களைக் குவித்திருந்தது.
தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜோ ரூட், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியான மூன்றாவது சதத்தைக் குவித்ததுடன் இது அவரது ஐந்தாவது இரட்டைச் சதமாகும். அத்துடன் அவரது 20 ஆவது சதமாகும்.
போட்டியின் இரண்டாம் நாளான நேற்று(07.02.2021) காலை 128 ஓட்டங்களிலிருந்து தனது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஜோ ரூட் சுமார் 9 மணித்தியாலங்கள் (536 நிமிடங்கள்) துடுப்பெடுத்தாடி 377 பந்துகளை எதிர்கொண்டு 19 பவுண்ட்றிகள், 2 சிக்சர்கள் அடங்கலாக 218 ஓட்டங்களை பெற்று கடைசி நேர ஆட்டத்தின்போது ஆட்டமிழந்தார். அவர் தனது இரட்டைச் சதத்தை சிக்சர்மூலம் குவித்தமை விசேட அம்சமாகும்.
போட்டியின் ஆரம்ப நாளான நேற்று முன்தினம் (05.012.2021) 3ஆவது விக்கெட்டில் டொம் சிப்லியுடன் 200 ஓட்டங்களைப் பகிர்ந்த ஜோ ரூட், அணிக்கு மீளழைக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸுடன் நேற்றையதினம் 4 ஆவது விக்கெட்டில் 124 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.