105 வயதிலும் விவசாயம் செய்து வரும் கோவை மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டிக்கு நாட்டிலேயே உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கி இந்திய மத்திய அரசு பெருமைப்படுத்தியுள்ளது.
கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள். 105 வயதான மூதாட்டி, ‘இயற்கையான உணவு ஆரோக்கியமான வாழ்க்கை’ என வாழ்ந்து வருகின்றார்.
தமது கிராமத்தில் 4 ஏக்கர் நிலத்தை வெறும் 700 ரூபாய்க்கு வாங்கி விவசாயத்தை தொடங்கிய மூதாட்டி, தற்போது சிறிது சிறிதாக சேர்த்து சுமார் 10 ஏக்கர் வரை நிலத்தை வாங்கி விவசாயம் மேற்கொண்டு வருகிறார்.
இது குறித்து பேசிய பாப்பம்மாள், ‘மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது கிடைத்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இது கோவை மாவட்டத்திற்கே கிடைத்த பெருமையாகும். இந்த விருது எனக்கு கிடைக்கக் காரணமே விவசாயம் தான். இதனால் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாய மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனக்கு கிடைத்த இந்த விருது அவர்களையும் ஊக்குவிப்பதாக அமையும். இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது வயது மூப்பின் காரணமாக நான் அளவான உணவையே எடுத்துக் கொள்கிறேன். கடந்த 50 ஆண்டுகளாக நான் வாழை இலையில் மட்டும் தான் சாப்பிட்டு வருகிறேன். அந்த காலத்தில் எல்லாம் அனைத்து வேலைகளையும் நாங்களே செய்து வந்ததால் உடம்பில் நோய்கள் வந்ததில்லை. அப்படி ஒரு சூழ்நிலை இருந்ததால் கிராமத்தில் மருத்துவமனைகளே அதிகம் இல்லாமல் இருந்தது. அது போல, நம்முடைய வேலையை நாமே செய்து கொண்டால் உடல் நலத்துடன் வாழலாம்’ என தனது உடல் ஆரோக்கியத்தின் ரகசியத்தை பாப்பம்மாள் பகிர்ந்து கொண்டார்.
நன்றி – பிகெயின்வூட்