இந்தியாவின் பீஹார் மாநித்தில் தரம் ஐந்தாம் வகுப்புப் படித்து வந்த, 11 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டின்பேரில் தலைமை ஆசிரியருக்கு மரண தண்டனையும், ஆசிரியருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், பீஹார் மாநிலம் புல்வாரி ஷரீப் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில், 5 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார். இதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட மாணவியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்குக் அழைத்துச் சென்றுள்ளர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிறுமியிடம் மருத்துவர்கள் மற்றும் பெற்றோர் விசாரித்தபோது, பாடசாலை தலைமைசிரியர் மற்றும் இன்னோர் ஆசிரியரின் பெயரை கூறிய மாணவி இவர்கள் இருவருமே பாலியல் வல்லுறவு செய்ததாக குறிப்பிட்டார்.
இது குறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு பாட்னா சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், நீதிபதி அவதேஷ் குமார் பிறப்பித்த உத்தரவில், மாணவி பலாத்கார வழக்கில் முக்கியக் குற்றவாளி, பள்ளி தலைமையாசிரியராக இருந்த அரவிந்த் குமாருக்கு தூக்கு தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மற்றொரு குற்றவாளியான, ஆசிரியர் அபிஷேக் குமாருக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
நன்றி :tamil.news18