செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் பொது இடங்களுக்கு வருகைத்தருபவர்கள் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது அவசியமாகுமென அரசாங்கம் கடந்த ஓகஸ்ட் மாதம் அறிவித்திருந்தது.
எவ்வாறாயினும் நாட்டில் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுமை பெறாத காரணத்தினால் குறித்த தீர்மானத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறியமுடிகிறது.
20 முதல் 29 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருவதன் காரணமாக, இவ்வாறு தடுப்பூசி அட்டை வைத்திருக்கும் தீர்மானம் இந்த சூழலில் பொருத்தமானதாக இருக்காது என அரசின் சில உயர்மட்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலம் நிறைவடைந்ததும் தடுப்பூசி அட்டை தொடர்பான தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் சுகாதார பிரிவினர் ஆலோசித்து வருகின்றனர்.
எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் பொது இடங்களுக்கு வருகை தருபவர்கள் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது அவசியமாகுமெனவும் இராணுவத்தளபதி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.