தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு மாதங்களில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். தற்போதைய நிலையில் சுற்றுலா, வியாபாரம், தொழிற்சாலைகள் உள்ளிட்ட சகல பிரிவுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மிகவும் கடினமான நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கு எதிர்பார்த்துள்ளோம். விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விளையாட்டுப் போட்டிகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான தடுப்பூசிகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டு தேசிய போட்டிகளில் பங்குபற்றுவதற்கான குழுவினர் பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் குறை கூறுபவர்களும் அனைவருக்கும் தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்பட்டதன் பின்னர் தடுப்பூசி பெற்றுக்கொண்டதாகக் கூறியவர்களும், முதலிலேயே தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். எனவே அவர்கள் தொடர்பில் நாங்கள் மகிழ்வடைகின்றோம். அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு தடுப்பூசியைப் பெற்றுக்கொடுத்துள்ளோம்.
தொழிற்சாலைகள், விளையாட்டு வீர, வீராங்கனைகள், சுற்றுலாத்துறையினர் என சகலருக்கும் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தடுப்பூசியைப் பிரித்துக்கொடுப்பது தொடர்பில் திட்டமொன்று வகுக்கப்பட்டு சகல சுகாதார அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார்.