முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொரோனா தொற்று காரணமாக இன்று காலமானார், அவருடைய குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் முகப்புத்தகத்தில் இட்டுள்ள பதிவில்
எமது நெருங்கிய நண்பரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர இன்று கொரோனா தொற்றினால் உயிர் நீத்தார். சிங்கள அரசியல்வாதிகளுக்குள் மற்றைய சமூகங்களின் நண்பன் இவரைப் போல் வேறு எவரும் கிடையாது. விடுதலைப் புலிகளினுடனான போர் நடத்தப்பட்ட முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் தனது அமைச்சுப் பதவியை இழந்தவர். பின்னர் அதே பதவியை திரும்ப பெற்ற போது இலங்கையில் நீதிக்காகவும் பொறுப்புக் கூறலுக்காகவும் நல்லிணக்கத்திற்காகவும் அயராது பாடுபட்டவர். நிதி அமைச்சராக வல்வெட்டித்துறையில் குமார் ஆனந்தன் நினைவாக நீச்சல் தடாகம் ஒன்றை திறந்து வைப்பதற்காக வந்தபோது எடுக்கப்பட்ட படம். அவருக்குப் பின்னால் அவரது நீண்ட கால தோழியும் செயலாளருமான லக்ஷ்மி ஜெகநாதனும் எனது வலது தோள்மூட்டுக்குப் பின்னாக அன்றைய வல்வெட்டித்துறை நகர சபை தலைவரும் சென்ற வாரம் கொரோனா காரணமாக மரணித்த திரு. கருணானந்தராஜாவும் உள்ளனர்.
“மங்கள சமரவீர அவருடைய அரசியல் வாழ்க்கையில் ஒரு போதும் பாகுபாட்டைக் காட்டியதில்லை. அவர் தமிழ் மக்களுக்கு சரியான விதத்தில் நீதி எட்டப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டைக் கொண்டவர். அவர் தாராளவாத சிந்தனைகளை பின்பற்றியவர். யுத்த காலத்தை எடுத்துக் கொண்டால், 2005ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகிய போது இவர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார், ஆனால் போர் முடிவுக்கு வருகின்ற தருவாயில் “நீங்கள் போரை முடிவுக்கு கொண்டுவருவது அவசியமாக இருந்தாலும் நீங்கள் அதனை கையாளும் முறையில் எனக்கு எந்தவித உடன்பாடும் இல்லை” என ஜனாதிபதியிற்கு இரண்டு கடிதங்கள் கடிதங்கள் அனுப்பியிருந்தார். இதன் காரணமாக அவருடைய அமைச்சுப் பதவியினை இழந்திருந்தார். இவ்வாறாக பற்பல சந்தர்ப்பங்களில் அவர் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த ஒருவர் என்பதை நாம் கண்டுகொண்டுள்ளோம்”