இலங்கையுடன் இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள குவைத் அரசாங்கம் , அரசாங்கம் சுகாதாரம் மற்றும் சக்திவளத் துறைகளில் இலங்கையிலிருந்து திறமையான தொழிலாளர்களை தொழிலுக்கு அமர்த்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் இலங்கைக்கான குவைத் தூதுவர் கலஃப் பு தைர் ஆகியோருக்கிடையில் (24/08) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன் போது குவைத் தூதுவர் , குவைத் வெளிநாட்டு அமைச்சர் ஷேக் கலாநிதி. அஹமத் நாசர் அல்-அஹமத் அல்-சபாவிடமிருந்தான வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான குவைத் அரசாங்கத்தின் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
குவைத் அரசாங்கம் சுகாதாரம் மற்றும் சக்திவளத் துறைகளில் இலங்கையிலிருந்து திறமையான தொழிலாளர்களை தொழிலுக்கு அமர்த்துவதற்கு எதிர்பார்த்துள்ளது.
தூதுவர் தைரின் கருத்துக்களுக்கு பதிலளித்த அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இலங்கை அரசாங்கமும் குவைத் அரசாங்கமும் மிகவும் நட்புறவான உறவுகளை அனுபவித்து வருவதாகவும், தனது காலப்பகுதியில் வளைகுடா நாடுகளுடனான இலங்கையின் உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கொவிட்-19 அவசர சுகாதாரத் துறைத் தேவைகளுக்காக குவைத் செஞ்சிலுவை அமைப்பு வழங்கிய நன்கொடைகளுக்காக குவைத் அமீருக்கான இலங்கை அரசாங்கத்தின் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் ஏனைய பல்தரப்பட்ட மன்றங்களில் குவைத் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவையும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எரிசக்தி, ஹோட்டல், சுற்றுலாப் பகுதிகள் மற்றும் நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் கட்டுமானத் துறைகளில் கூட்டு ஒத்துழைப்பு சாத்தியம் குறித்து வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் குவைத் தூதுவர் கலந்துரையாடினர்.
இரு நாடுகளும் சுகாதாரம், சுற்றுலா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளில் கூட்டுத் திட்டங்களின் சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு இதன் போது இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.