இலங்கையில் ஏற்பட்டுள்ள ஒட்சிசன் தேவை தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறும் , குறிப்பாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள நடமாடும் ஒட்சிசன் தொகுதியை இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல , இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார அமைச்சில் புதன்கிழமை (25/08) சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கொரோனா பேரழிவைத் தணிப்பதில் இரு நாடுகளும் ஒரு சவாலை எதிர்கொள்கின்றன என்றும், நட்பு நாடுகளாக இரு நாடுகளும் எதிர்கொள்ளும் சவாலான முறைகள் குறித்த நடைமுறை அறிவைப் பரிமாறிக் கொள்வது மிக முக்கியம் என்றும் இந்திய உயர் ஸ்தானிகர் இதன் போது சுட்டிக்காட்டினார்.