அசாமில் ஒரு வாரத்துக்கும் மேலாக இடைவிடாது பெய்து வரும் மழையால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அசாமின் பெரிய நதியான பிரம்மபுத்திராவிலும், அதன் துணை ஆறுகளிலும் வெள்ளம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
அங்குள்ள 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், முக்கிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், சுமார் 1.33 இலட்சம் பேர் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினரும், தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை சுமார் 7,000 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருப்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்