காற்சட்டையில் தங்கப் பசையை பூசி, தங்கம் கடத்த முயன்ற விமானப் பயணி ஒருவரை கேரள மாநிலத்தின் கண்ணூர் விமான நிலைய அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
தங்கம் கடத்துபவர்கள் பொதுவாக நகைகள் அல்லது தங்க பிஸ்கட் போன்றவை மூலம் அதை கடத்துவர்.
ஆனால், இந்நபர் தான் அணிந்திருந்த இரட்டை அடுக்கு கொண்ட காற்சட்டைக்குள் தங்கப் பசையை பூசிக்கொண்டு வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
மெல்லிய படையாக 302 கிராம் தங்கம் காற்சட்டையில் பூசப்பட்டிருந்ததாகவும் இதன் பெறுமதி சுமார் 38 இலட்சம் ரூபா என சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வான் புலனாய்வுப் பிரிவும் சுங்கத் திணைக்களமும் இணைந்து இக்கடத்தலை முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி நபரின் தங்கக்கடத்தல் நுட்பத்தை அறிந்த பலரும் வியப்பு தெரிவித்துள்ளனர்.
அண்மையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவிலிருந்து பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசர்ஸ் நகரில் வந்திறங்கிய நபர் ஒருவரின் உள்ளாடைக்குள் 1,894 கிராம் தங்கம் பசையாக கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.