கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் சம்பவம் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரியூட்ட முடியாத நிலையில் 20க்கு மேற்பட்ட சடலங்கள் வைத்தியசாலையின் பிரேத அறையில் பேணப்பட்டு வரப்பபடுகிறது. இந் நிலையில் அனுராதபும் கெக்கிராவா பகுதிக்கு கொண்டு சென்று சடலங்களை எரியூட்டுவதற்கு நடவடிக்கை ஒன்று நேற்று(05) முதல் மேற்கொள்ளப்பட்டு வரபட்டது.
இந் நிலையில் உயிரிழந்த முதியவர் ஒருவரின் சடலம் கடந்த 3ம் திகதி மாற்றி எரியூட்டப்பட்ட நிலையில், வேறு ஒருவரின் சடலத்தினை நேற்றையதினம்(05) வேறு ஒரு குடும்பத்தினருக்கு மாற்றி வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதுடன், அந்த சம்பவம் சட்ட வைத்திய அதிகாரி பிரிவில் உள்ளவர்களினதும், பிரேதஅறை பொறுப்பதிகாரியின் கவனயீனமான செயற்பாடு என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.rjkapilan
பண்டத்தரிப்பு பகுதியினை சேர்ந்த பூசாரி ஒருவர் கொரோனா தொற்றினால் கடந்த 2ம் திகதி இறந்த நிலையில் அந்த சடலத்தினை 3ம் திகதி யாழ்ப்பாணம் கோம்பையன் மயாணத்தில் எரியூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 3ம் திகதி காரைநகர் வாரிவளவு பகுதியினை சேர்ந்த முதியவர் ஒருவரும் தொற்றினால் உயிரிழந்திருந்தார். இந் நிலையில் சடலங்களை அடையாளப்படுத்துவதற்கு கட்டப்படும் ரைக் பிரேத அறையில் கடமையாற்றிய சிற்றூழியர்களின் தவறினால் மாற்றி பொறிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் 3ம் திகதி சடலம் எரியூட்டுவதற்கு அனுமதி பெற்ற பண்டத்தரிப்பு பகுதியினை சேர்ந்தவருக்கு காரைநகர் வாசியின் உடல் மாறி வழங்கப்பட்டுள்ளது. இந் நிலையில் காரைநகர் வாரி வளவு பகுதியினை சேர்ந்த முதியவரின் மகன் சடலத்தினை எடுத்து சென்று அனுராதபுரம் கொண்டு சென்று கொண்டிருந்த போது, குறித்த சடலம் தனது தந்தையாருடையது இல்லை என தெரிவித்த நிலையில் சடலம் வவுனியாவினை அடைந்த நிலையில் மீண்டும் யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த மகன் இன்றையதினம் சடலத்தினை அடையாளம் காட்டிய பின் சடலத்தினை புகைப்படம் எடுத்து வெளிநாட்டில் உள்ள தனது சகோதரிக்கு அனுப்பிய நிலையில், குறித்த சடலம் தங்கள் தந்தையாருடையது இல்லை என தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்தே சடலம் மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் தங்களுடைய உறவினர் என எடுத்து சென்று எரியூட்டிய சடலத்தின் அஸ்தியினை காரைநகர் வாரிவளவு பகுதியினை சேர்ந்தவர்களுக்கு வாங்கி கொடுக்க வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சடலம் மாற்றி வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரீ.சத்தியமூர்த்தி தலைமையில் உள்ளக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. சட்ட வைத்திய அதிகாரி பிரிவின் ஊடாக பிரேத அறையில் கடமையாற்றும் ஊழியர்களின் கவனயீனமே இவ்வாறு தவறு நடக்க காரணம் என தெரியவந்துள்ளது.