இலங்கை அரசாங்கம், உண்மையாகவும், நம்பகத்தன்மையுடனும் குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் தீர்ப்பளிக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்று அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச கலந்துரையாடல் அமைப்பு ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கையில் நல்லிணக்க செயல்முறைக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இந்த விடயம் தொடர்பாக நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் முழுமையான கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருக்கிறோம்.
அனைத்து சிறிலங்காயர்களுக்கும், நல்லிணக்கம், நிலைமாறு கால நீதி மற்றும் நீடித்த அமைதியை முன்னெடுத்துச் செல்ல முடியும் என நாங்கள் நம்புகிறோம்.
மனித உரிமைகளை நிலை நிறுத்துவது கடினமானது என்றாலும், நாம் அதனை எமது நாட்டில் செய்ய முயற்சிப்பது மட்டுமன்றி, எங்கள் கூட்டாளிகளுக்கும், இது மிகவும் முக்கியம் என்று நம்புகிறோம்.
கடந்தகால மற்றும் நிகழ்கால மனித உரிமைகள் பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காண வேண்டும். கடந்த கால மற்றும் நிகழ்கால அநீதிகளுக்கு நாம் தீர்வுகாண வேண்டும்.” என்றும் அமெரிக்க தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.