வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளுக்காக மட்டும், தெரிவு செய்யப்பட்ட சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் விசேட அனுமதிப்பத்திரம் உள்ள இடங்களில் மதுபானம் விற்பனை செய்ய மதுவரித் திணைக்களம் அனுமதியளித்துள்ளது.
உரிய சுகாதார வழிகாட்டல்கள் பிரகாரம், ‘ பயோ பபிள்’ திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகளாகவரும் வெளிநாட்டவர்களுக்கு மட்டும், சுற்றுலா ஹோட்டல்களுக்கு வழங்கப்பட்டுள்ள மது அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் மதுபானம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, மதுவரி திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி மதுவரி ஆணையாளர் (சட்டம்) கபில குமாரசிங்க தெரிவித்தார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள வழி காட்டல்களுக்கு அமைய, சுற்றுலா ஹோட்டல்கலில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் வசதிக்காக, எப்.எல். 7 எனும் அனுமதிப்பத்திர வகையான ஹோட்டல் அனுமதிப்பத்திரம், எப்.எல். 8 அனுமதிப் பத்திர வகையான ஹோட்டல் மதுபான நிலைய விற்பனை அனுமதிப்பத்திரம் ஆகியவற்றின் கீழும், புடிக் விலா எனப்படும் ஹோட்டல் பிரிவுகள் தொடர்பிலும் இந்த மதுபான அனுமதி வழங்கபப்டுவதாக மதுவரி திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி மதுவரி ஆணையாளர் ( சட்டம்) கபில குமாரசிங்க சுட்டிக்காட்டினார்.
தனிமைப்படுத்தல் காலப்பகுதியில், ‘ பயோ பபிள்’ திட்டத்தின் கீழ் மதுவரி திணைக்களத்தினால் ஏ,பீ என தரப்படுத்தப்பட்டுள்ள ஹோட்டல்களிலேயே சுற்றுலா பிரயாணிகள் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவதுடன், அவற்றுக்கே இந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஏனைய ஹோட்டல்கள் தொடர்பில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலம் நிறைவுற்றதும் அனுமதியளிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர் சாதாரண மது விற்பனை நிலையங்களை திறக்க அனுமதிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு திறக்கப்படும் மது விற்பனை நிலையங்களின் முன்பாக சுகாதார வழி முறைகளை மீறி மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் பொறுப்பும் மதுபான விற்பனை நிலைய உரிமையாளர்கள் மீது சாட்டப்படவுள்ளது.