உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட, அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி (Ayman al-Zawahiri ) காணொளி ஒன்றில் தோன்றியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அல்-கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால், உயிரிழந்ததாக தகவல் வெளியானபின் அவர் எந்த காணொளியிலும் தோன்றவில்லை.
இந்த நிலையில் நேற்று, செப்ரெம்பர் 11 தாக்குதல் நினைவு நாளன்று, ஜவாஹிரியின் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
60 நிமிடங்களைக் கொண்ட அந்த காணொளியில், ஜெருசலேம் ஒருபோதும் யூதமயமாக்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளதுடன், சிரியாவில் ரஷ்ய இராணுவம் மீது அல்-கொய்தா நடத்திய தாக்குதலையும் பாராட்டியுள்ளார்.
இந்த காணொளியை ஆராய்ந்த புலனாய்வுப் பிரிவுகள், நேற்று இது வெளியிடப்பட்டதை உறுதி செய்துள்ளன.
எனினும், இந்த காணொளியில், தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது அல்-ஜவாஹிரி ஏதும் கூறாத நிலையில், இது பழைய காணொளியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.