இந்திய அமைதி காக்கும் படையினரிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டு உயிர்நீத்த திலீபன் என்று அறியப்படும், ராசய்யா பார்த்திபனுக்கான நினைவேந்தலின் இறுதி நாள் இன்றாகும்.
1987 செப்டெம்பர் 15 ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அவர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.48 மணிக்கு அவர் உயிர்நீத்தார்.
அவர் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டு மறைந்த காலப்பகுதி வருடாந்தம் அவருக்கான நினைவேந்தல் வாரமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
எவ்வாறாயினும், கொரோனா காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.