யாழ்.நெடுந்தீவுக்கு பாகிஸ்தான் இராஜதந்திரி ஒருவர் விஜயம் மேற்கொண்டதாக வெளியான தகவல்கள் குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கரிசனை வெளியிட்டுள்ளதுடன் இது குறித்து தெளிவுபடுத்தல்கள் அவசியம் என தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்கள் உண்மை என்றால் நாங்கள் இது குறித்து கரிசனை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள அவர் எங்கள் பகுதிகளில் பிராந்திய நாடுகளிற்கு இடையில் எந்த விவகாரமும் உருவாவதை நாங்கள் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த விஜயம் குறித்து மேலும் தகவல்களை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை பாகிஸ்தான் இராஜதந்திரி நெடுந்தீவிற்கு விஜயம் மேற்கொண்டார் என வெளியான தகவல்களை தூதரகம் நிராகரித்துள்ளது.
இதனை நிராகரித்துள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் ஊடக அதிகாரி கல்சூம் குவைசர் இது போலியான செய்தி என தெரிவித்துள்ளார். யாழ் குடாநாட்டிற்கு தூதுவர் கடந்த வாரம் விஜயம் மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் இராஜதந்திரியொருவர் தனது குடும்பத்துடன் விஜயம் மேற்கொண்டார் என கேள்விப்பட்டுள்ள போதிலும் இதனை உறுதி செய்ய முடியவில்லை என நெடுந்தீவு பிரதேச செயலாளர் எஸ் சத்தியசோதி தெரிவித்துள்ளார்.
இராஜதந்திரியின் விஜயம் குறித்து எங்களிற்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர் இது தனிப்பட்ட விஜயமாகயிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.