கெரவலப்பிட்டி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கான தொழினுட்ப மற்றும் மூல வரைபு ஒரு மாதத்திற்குள் செயற்படுத்தப்படும். மின்நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான பங்கு பறிமாற்று ஒப்பந்தம் அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ளது என நிதியமைச்சு அறிவித்துள்ளது.
கெரவலப்பிட்டி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகள் அமெரிக்காவின் நிவ் போர்ட்ஷ் எனர்ஜ் நிறுவனத்தினால் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
எரிவாயு விநியோகம் மற்றும் அபிவிருத்தி பணிக்கான உரிய நிதியை அமெரிக்க நிறுவனம் வழங்கியுள்ளது. அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 40 சதவீத பங்குகள் 15 வருடத்திற்கு பிறகு இலங்கை மின்சார சபைக்கு பொறுப்பாக்கப்படும். 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியவுடன் கெரவலபிடிய மின்நிலைய விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ள நிலையில், மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியுள்ளமை மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து தெளிவுப்படுத்துவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியினர் இவ்வாரம் மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.