தனிமைப்படுத்தல் ஊரடங்கை ஒக்டோபர் முதலாம் திகதி தளர்த்துவதற்கு தேவையான உரிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து பிரிவுகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய, சுகாதார, போக்குவரத்து மற்றும் ஏனைய பிரிவுகளினால் இந்த பரிந்துரைகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதுடன், அதனை மேலும் நீடிக்காமல் இருக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடு மீள திறக்கப்பட்டாலும் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.