விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக, நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை எஸ்.ஏ.சந்திரசேகர் பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து, நடிகர் விஜய் தனது தந்தை தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ- தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை குடியியல் நீதிமன்றில் நடிகர் விஜய் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று நடைபெற்ற போது எஸ்.ஏ சந்திரசேகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் மக்கள் மன்றத்தை கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும், விஜய் மக்கள் இயக்கம் தற்போது இல்லை என்றாலும் விஜய் ரசிகர்களாக பின் தொடர்வதாகவும் பதில் மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.