இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பிர் சாள்ஸ் நிர்மலநாதன் இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இலங்கை கடற்படையின் தாக்குதலில் இருந்து தமிழர்களை குறிப்பாக தமிழ் மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பிர் சாள்ஸ் நிர்மலநாதன் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மன்னார் பேசாலை – வங்காளைபாடு பிரதேசத்திலிருந்து கடந்த 24 ஆம் திகதி கடற்தொழிலுக்கு சென்று கரை திரும்பிய மீனவர்கள் இருவரை இலங்கை கடற்படையைச் சேர்ந்த இருவர் மதுபோதையில் தாக்கியுள்ளனர்.
கிராம சேவையாளர் அப்பகுதியில் மீனவர்கள் தாக்கப்படுவதை எதிர்த்து கேள்வி கேட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன், அங்கு நின்ற மீனவர்கள், பெண்கள், கிராமசேவகர் உட்பட அனைவரையும் கடற்படையினர் தாக்கியிருந்தனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள தமிழர்கள் தங்கள் பாதுகாப்புக் குறித்து அச்சத்திலுள்ளதாக பாராளுமன்ற உறுப்பிர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் மீதான நடுநிலைமையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால், இந்தச் சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருக்கு அறிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.
தமிழர்களை குறிப்பாக மீனவர்களை கடற்படையினரிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.