இலங்கைக்கு வருகைதந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிகள் குழுவை இன்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடிய சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினை நிறுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
மாறாக அவ்வரிச்சலுகையைத் தொடர்ந்து பெறுவதற்கான மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம்சார் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கான அழுத்தங்களை அரசாங்கத்திற்கு வழங்குமாறும் அவர்கள் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினைத் தொடர்ந்து வழங்குவது குறித்த மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக நாட்டை வந்தடைந்திருக்கும் ஐவரடங்கிய ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர், தமது மதிப்பீட்டுப்பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிகளுக்கும் இடையிலான சந்திப்பு (28/09) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஜனநாயகம், மனித உரிமைகள், சிறைக்கைதிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதுடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகாலத்தொடர்பு குறித்தும் நினைவுகூரப்பட்டது.
இச்சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவிடம் வினவிபோது,
ஏற்கனவே வாக்குறுதியளிக்கப்பட்டவாறு பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் உரியவாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டியதன் அவசியம் தொடர்பில் இதன்போது வலியுறுத்தப்பட்டது. அதன் அவசியம் தொடர்பில் ஏற்கனவே லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டிப்பேசியுள்ளமை குறித்து நாம் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தோம்.
அத்தோடு இலங்கைக்கு வழங்கிவருகின்ற ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தவேண்டாம் என்று சஜித் பிரேமதாஸ ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார். இதன்மூலம் நாட்டுமக்கள் வேலைவாய்ப்பைப் பெற்றிருப்பதுடன், தற்போதைய டொலர் பற்றாக்குறை நிலைவரத்தில் இவ்வரிச்சலுகை மூலமான ஏற்றுமதிகள் நாட்டிற்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என்றும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.
இவ்வரிச்சலுகையை இரத்துச்செய்வதால் நாட்டுமக்களே பாதிக்கப்படுவர். ஆகவே ஜீ.எஸ்பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்கு அவசியமான மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்தல் உள்ளிட்ட கடப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கான அழுத்தங்களை அரசாங்கத்திற்கு வழங்குமாறும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டோம் என்று குறிப்பிட்டார்.