யாழ்.நெடுந்தீவுக்கு விஜயம் செய்த பாகிஸ்தான் துாதுவரை அரச சார்பு கட்சி ஒன்றின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேசசபை உறுப்பினர்களுமே வரவேற்றார்கள் என வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் க.விந்தன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
நேற்றைய தினம் ஊடகங்களை சந்தித்து சமகால விடயங்கள் தொடர்பாக கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், பாகிஸ்தான் தூதுவர் தீவகத்தை இலக்கு வைத்து அடிக்கடி விஜயம் செய்வதாக நாம் அறிகிறோம். தீவகத்தில் ஏற்கெனவே சீனா மீள் புதுப்பிக்கத்தக்க சக்தித் திட்டம் என்ற போர்வையில் தீவகத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான நாடுகளாக இருக்கின்ற பாகிஸ்தான் மற்றும் சீனா யாழ்.தீவகப் பகுதிகளில் கால் பதிப்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் பாரிய ஆபத்து. இவ்வாறான நிலையில் திருட்டுத்தனமாக நெடுந்தீவுக்கு வருகை தந்த பாகிஸ்தான் தூதுவரை பிரதேசசபை வாகனத்தில் அழைத்துச் சென்று நெடுந்தீவை சுற்றி காண்பித்தமை எமக்குப் பல சந்தேகங்களை எழுப்புகின்றது.
ஆகவே பாகிஸ்தான் தூதுவர் நெடுந்தீவில் ஏதாவது திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்குடன்
மீண்டும் விஜயம் செய்வாராயின் மக்களைத் திரட்டிப் போராட்டத்தில் குதிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.