தமிழ் மக்களின் பிரதிநிதிகளை புறக்கணித்து விட்டு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுப்பது வேடிக்கையானது என்று, இலங்கையின் முன்னாள் இராஜதந்திரி, கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
“ ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை முக்கியமான நாடுகளின் தலைவர்கள் எவரும் சந்திக்கவில்லை. இது பெருமைப்படக் கூடிய விடயம் அல்ல.
அதேபோல அவர் தனது உரையின் போதும் ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துக்களையே முன்வைத்துள்ளார். புலம்பெயர் தமிழ் அமைப்புகளை சந்தித்து பேச்சு நடத்த தயார் என கூறியிருக்கிறார்.
இலங்கையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகளுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லாத ஒருவர் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு அழைப்பு விடுப்பது என்பது கேள்விக்கு உட்படுத்தும் கருத்துக்களாகும்.
தேசிய ரீதியில் அனைத்தையும் கையாள்வதாக கூறிக்கொண்டு, தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்காது, புலம்பெயர் அமைப்புகளுடன் பேசுவேன் என கூறுவது யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது.
அதேவேளை, இலங்கையில் அரசாங்கம் போருக்குப் பின்னர் மாற்றங்களை செய்திருக்க வேண்டும். குறிப்பாக பயங்கரவாத தடை சட்டம் போன்றவற்றை நீக்கியிருக்க அல்லது தளர்வுகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இவ்வாறான காரணங்களை காட்டி ஜி.எஸ்.,பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரத்திற்கும் அபிவிருத்திக்கும் பாரிய அடிவிழும்,” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.