தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ 16,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 8 ஆம் திகதி முதல் குறைந்தபட்ச ஊதிய வரம்பு அமுலுக்கு வருவதாக தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். தற்போது தனியார் பாதுகாப்பு துறைக்குள் குறைந்தபட்ச ஊதியம் ரூ 10,500 ஆகும்.
தொழிலாளர் துறையின் குறைந்தபட்ச ஊதியத் திருத்தத்தின் படி, தனியார் பாதுகாப்புத்துறை அடிப்படை சம்பளமாக ரூ 12,500 மற்றும் ரூ 3,500 செலவுக் கொடுப்பனவை சேர்த்து குறைந்தபட்சம் ரூ 16,000 மொத்த சம்பளத்தை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
இந்தச் சட்டத்தின்படி, ஒரு தனியார் பாதுகாவலரின் அதிகபட்ச தினசரி வேலை நேரம் ஒன்பது மணிநேரமாக வரையறுக்கப்படும், அதில் உணவுக்கான நேரமும் அடங்கும். ஒன்பது மணி நேரத்திற்கு மேல் பணிபுரியும் எவருக்கும் மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
தனியார் பாதுகாப்பு அதிகாரிகள் பெரும்பான்மையானவர்கள் முப்படைகளின் ஓய்வுபெற்ற வீரர்கள். அவர்கள் விடுமுறை அல்லது மருத்துவ விடுப்பு பெறுவதில்லை என்று குறிப்பிடப்பட்டது. அமைச்சர் டி சில்வா, தனியார் பாதுகாவலர்கள் விடுமுறை நாட்களுக்கும் தகுதியுடையவர்கள் என்பதை உறுதிசெய்தார்.
தொழிலாளர் சட்டங்கள் மீறப்பட்டால், தொழிலாளர் திணைக்கள பணிப்பாளரிடம் முறையிட பொதுமக்களுக்கு உரிமை உண்டு என்று குறிப்பிட்டுள்ளார். நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியங்கள் உட்பட அதிகரித்த ஊதியங்களை வழங்க சலுகை காலம் வழங்கப்படும் என்று கூறினார்.