யாழ்.ஏழாலையில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய ரவுடியை பொதுமக்கள் பிடித்து சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்தபோதும் பொலிஸார் அவரை தப்பிக்க விட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு ஏழாலை சிவகுரு கடைக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் புகுந்த வாள்வெட்டுகுழு ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் வீட்டிலிருந்த ஒருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். மேலும் உடமைகளும் சேதமடைந்துள்ளது. இந்தத் தாக்குதல் இடம்பெற்றபோது சத்தம் கேட்டு ஓடிவந்த அயல்வீட்டார் தாக்குதல் நடத்தவந்த ரவுடி குழுவை சேர்ந்த ஒருவரை மடக்கிப் பிடித்திருக்கின்றனர்.
பின்னர் பொலிஸாரை அழைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் பொலிஸாரிடமிருந்து ரவுடி தப்பிவிட்டான். இந்நிலையில் பொலிஸார் அவனை வேண்டுமென்றே தப்பிக்க விட்டதாக ரவுடியை பிடித்துக் கொடுத்த பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை நடக்கவேண்டும் எனவும் மக்கள் கூறியுள்ளனர்.