இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 20ஆம் நாள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று இந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகரில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை, எதிர்வரும் 20ஆம் நாள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.
பௌத்த யாத்திரைத் தலங்களுக்கு அருகே அமைந்துள்ள இந்த விமான நிலையத்துக்கு, இலங்கையிலிருந்து செல்லும் விமானமே முதன்முதலாக தரையிறங்கவுள்ளது.
முதல் விமானத்தில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த யாத்திரிகர்கள் 125 பேருடன் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கொழும்பு வந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஹர்ஷ் வர்த்தன் ஷ்ரிங்லா, குஷிநகர் விமான நிலையத்தில் முதலாவதாக இலங்கையிலிருந்து வரும் விமானம் தரையிறங்கும் என்று நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
அதேவேளை குஷிநகர் விமான நிலைய திறப்பு விழாவுக்குச் செல்லும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களைச் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இந்தப் பயணம் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் இன்னமும் எந்த தகவலையும் வெளியிடவில்லை.