
“கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள், பொதுமக்களுக்காகப் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
“உலகிலுள்ள இராணுவத்தினர் யுத்தத்துக்கு மாத்திரமன்றி, தேசத்தைக் கட்டியெழுப்பவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். எமது நாட்டின் முப்படையினர், தனிமைப்படுத்தல் மற்றும் தடுப்பூசி ஏற்றல் போன்ற சுகாதாரத் தரப்பினரின் பணிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி, கொவிட் ஒழிப்புக்காகச் செயற்பட்டு வருகின்றனர். அதற்காக அவர்கள் வழங்கிய அர்ப்பணிப்புடன் கூடிய சேவைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும், ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கை இராணுவத்தின் 72ஆவது வருடப் பூர்த்தியையொட்டி, இன்றைய தினம் (10) அநுராதபுரம் – சாலியபுர கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் இடம்பெற்ற இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவதினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்கள், சாலியபுர கஜபா ரெஜிமென்ட் முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அணிவகுப்பு மைதானத்தைத் திறந்து வைத்து, இராணுவத்தினரிடம் கையளித்தார். அதன் பின்னர், அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டார்.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி

“மக்களுக்கு உறுதியளித்தவாறு, புதிய அரசியலமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறைமையை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அதற்காக, அனைத்து அதிகாரிகளும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.
இராணுவதினக் கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் காணப்படும் மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்களின் உருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தியதோடு, ரெஜிமென்ட் தலைமையகத்தில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.

கஜபா ரெஜிமென்ட்டின் பொறியியல் படைப்பிரிவினரால் பழுதுபார்க்கப்பட்ட கனிஷ்ட மற்றும் அங்கிகரிக்கப்பட்ட அதிகாரிகளின் வீடுகள், பயன்பாட்டுக்கு இணைக்கப்பட்ட இராணுவ வாகனங்கள் போன்றவற்றையும், ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.
கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்துக்கு மேற்கொண்ட விஜயத்தை நினைவுபடுத்தும் வகையில், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால், ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுச் சின்னமொன்று பரிசளிக்கப்பட்டது.

பாதுகாப்புச் செயலாளர் (ஓய்வுபெற்ற) ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவத்தின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர், இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.