இலங்கை இராணுவத் தளபதியும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் அழைப்பின்பேரில் இந்திய இராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே 2021 ஒக்டோபர் 12ஆம் திகதி கொழும்பை வந்தடைந்துள்ளார்.
ஜெனரல் நரவானே மற்றும் இராணுவ பெண்கள் நலன்புரி அமைப்பின் (AWWA) தலைவர் திருமதி வீணா நரவானே ஆகியோரை ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவின் (ASVU) தலைவர் திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோர் கொழும்பு. பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது ஜெனரல் நரவானே அவர்கள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர், வெளிவிவகார செயலாளர் மற்றும் படைகளின் தளபதிகள் ஆகியோருடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.
மேலும் கஜபா தின கொண்டாட்டங்களிலும் அவர் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். பத்தலந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் உரை ஒன்றை நிகழ்த்தவுள்ள அவர் அங்குள்ள மாணவர்களுடன் உரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலுமான பகிரப்பட்ட ஆழமான ஒத்துழைப்பு மற்றும் வலுவான உறவுகள் ஆகியவற்றை இந்த விஜயம் பிரதிபலிக்கின்றது. இந்தியாவின் முன்னுரிமைக்குரிய பங்காளராக இலங்கை காணப்படும் சூழலில் பரஸ்பர நலன்கள் மற்றும் ஏற்கனவே காணப்படும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான மார்க்கங்கள் தொடர்பாக இந்த விஜயத்தின்போது ஆராயப்படும். இந்த கலந்துரையாடல்கள் அனைத்தும் கொவிட்-19 வழிமுறைகளை மிகவும் இறுக்கமாக பின்பற்றியவாறு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.